இரவு இரண்டு மணி, ஒருவழியாய் வேலையை முடித்துவிட்டு அலுத்துப்போய் கிளம்பினான் இவன். வழக்கத்திற்கு மாறாய் நான்கு உதை சேர்த்து வாங்கிய பைக்கை விர்ர்ர்ரென விரட்டினான். மதியத்தில் பரபரக்கும் சாலை, குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தது.
நீண்ட நெடும் பயணத்திற்குப் பின் ஜி.எச். நிறுத்தத்தில் அவனை துப்பிவிட்டு போன பேருந்து கக்கிவிட்டுச் சென்ற புகை மட்டும் வாசனையாக மிஞ்சி நின்றது. ஆள் அரவம், ஆட்டோகூட இல்லை. மூனு கிலோ மீட்டர் நடக்கனுமே. முதுகை அழுத்திய பையோடு பெருந்துறை சாலையில் நடக்கத் துவங்கினான் .
இவன் ஜி.எச் கடக்கும் போது, பேண்ட் சர்ட், பேக், ஷூ என லிப்ட் கேட்பவனை ஏனோ தவிர்க்கத் தோணவில்லை. வண்டியை நிறுத்தி, விரைப்பாய் புருவம் உயர்த்தினான்.
”சார்! டீச்சர்ஸ் காலனி வரைக்கும்”
”……ம்”
இரண்டு மணி இரவும் கூட கசகசப்பாகவே இருந்தது.
பர்சில் இருந்த இருபத்திநாலாயிரமும், கழுத்தில் கிடக்கும் ஐந்து பவுன் செயினும், அவன் மேல் இனம்புரியா சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தி மனதைப் புரட்டியது. அஞ்சு பவுன்னா... அறுபதுக்கு மேல வருமே... கத்தி, எய்ட்ஸ் ஊசி என என்னென்னவோ ஞாபகம் வர வண்டியை வேகமாக முறுக்கினான் இவன்.
இப்படி முறுக்குறானே வண்டியை, நடந்தே போயிருக்கலாமோ, அவசரப்பட்டு ஏறிட்டமோ, வசூல் பணம் நாற்பத்தியேழாயிரமும், காஸ்ட்லி போனும் அடிவயிற்றில் உருவமில்லா ஒரு காற்று உருண்டையை புரள விட்டது. ஓடும் வண்டியில் இருந்து எட்டிக் குதித்து, குட்டிக்கரணம் போட்டு தப்பிப்பது போல் மின்னலாய் ஒரு சினிமாத்தன கற்பனையோடியது அவன் மனதில்.
காலை 7.30 மணி அழுக்கடைந்த நகரப்பேருந்தின் ஜன்னல் ஓரம் கை முட்டியில் அழுக்குப் படாமல் சிறிது ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறேன். நகரப் பேருந்து என்பதால் மனிதர்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்கள். காலை நேரம் என்பதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது, ஆனாலும் நடத்துனர் முன்னும் பின்னும் அலைந்து கொண்டேயிருந்தார்.
மனிதர்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் அவர்களை மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏ... ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் எறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை.....
மூலப்பட்டறை அருகே குறுகலான திருப்பத்தில் இருக்கும் நிறுத்தத்தில், சிறிது தூரம் தள்ளி பேருந்து நிற்கிறது. நடத்துனர் யாரையோ திட்டுவதுபோல் தெரிகிறது, எதையோ எடுத்து படிக்கட்டு வழியே வீசுகிறார், ஒரு திடுக்கிடலோடும், கொஞ்சம் ஆர்வத்தோடும் சன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன். நான்கு முனைகளும் இழுத்து மையத்தில் முடிச்சு போடப்பட்ட ஒரு பழைய துணிமூட்டை விழுந்த வேகத்தில் லேசாய் அதிர்கிறது. சில நொடிகளில் ஒரு நைந்துபோன கிழவி இறங்குவது தெரிகிறது. நகரும் பேருந்தின் பக்கவாட்டில், அவசரமாய், தள்ளாடிக்கொண்டு, துணி மூட்டையை நோக்கி குனியும் கூன்விழுந்த முதுகு தெரிகிறது. ஏனோ என்னுடைய பாட்டி நினைவுக்கு வருகிறார், அந்த நடத்துனரின் தாயோ, பாட்டியோ அந்த கிழவியின் வயதொட்டி இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது.
சற்று நேரத்தில், ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்து, நவீன கட்டண கழிப்பிட அறைக்கு அருகில் நிற்கிறது. உள்ளிருந்த பயணிகளை துப்பிவிட்டு, புதிதாய் மனிதர்களை நிரப்பிக்கொண்டிருந்தது பேருந்து. மனிதர்களை பயணிகளாக்குவதற்கு "பார்க், ஸ்டேசன், நால்ரோடு" என நடத்துனர் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ....
நவீன கட்டண கழிப்பிட அறை நகரத்தின் சாட்சியமாகவும், நரகத்தின் ஒரு முன் மாதிரியாகவும் அழுக்கும், துர்நாற்றமும் தன் அடையாளமாக கொண்டு நிற்கிறது. கொஞ்சம் நீளமாக இருக்கும் அறைக்கு, இரண்டு நுழைவாயில்கள், ஒருபுறம் ஆண் படமும், இன்னொரு புறம் பெண் படமும் பொருத்தப்பட்டிருக்கிறது. இரண்டு கதவுகளுக்கும் இடையே இருக்கு மைய இடைவெளியில் ஒரு தகர நாற்காலியும், தகர மேசையும், மேசை மேல் விரித்துப்போட பட்ட பழைய செய்திதாளும், அடுக்கி வைக்கப்பட்ட சில்லறை காசுகளும் தெரிகிறது.
நவீன கட்டண கழிப்பிடப்பிடத்தின் எல்லா அம்சங்களும் பொருந்திய அழுக்கோடு ஓட்டை விழுந்த பனியனோடு இருந்த கழிப்பிடப் பொறுப்பாளார், கழிப்பிடத்திற்கு வந்த வாடிக்கையாளனோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அநேகமாக சில்லறை குறித்த சண்டையாக இருக்கலாம் என மனதுக்குப்பட்டது. பேருந்து மெல்ல நகரத்துவங்கியது...
மனிதர்களால் காலை நேரத்திலும் கூட கோபங்களையும், சண்டைகளையும் தவிர்க்க முடிவதில்லை. மனிதனுக்கு மனிதனோடு என்றும் சண்டை வருவதில்லை. மனிதன் நடத்துனராகவும், மனிதன் பயணியாகவும் அடையாளம் மாறும்போது கோபம் எளிதாக வருகிறது. மனிதன் கழிப்பிட பொறுப்பாளனாகவும், மனிதன் வாடிக்கையாளனாகவும் அடையாளம் மாறும் போது சண்டை எளிதாக வருகிறது.
மனிதனாக இருக்கும் வரை சுகமே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது மனிதனாகவே இருக்கிறோம், அதுதான் நிஜமுகமும் கூட.
பழுப்பேறிய வெள்ளை வேட்டி சாயம் போன கசங்கிய சட்டை தடித்த முண்டாசு நரைத்த முள்தாடி பளபளக்கும் நகரத்து சந்திப்புகளில் தட்டுத் தடுமாறும் கிராமத்தானை ”சாவு கிராக்கி” என கடக்கும் நகத்தில் அழுக்குச்சேரா நகரத்தானின் அடுத்த வேளை சோற்றிலாவது அந்தச் சாவுகிராக்கி சிந்திய வியர்வையின் உப்பு கொஞ்சம் கரிக்கட்டும்!
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட செயலை கேள்விப்பட்ட போது திராணியற்ற தமிழ்சமுதாயத்தில் நானும் ஒருவன் என்று நினைக்க வேதனையாக இருந்தது. அந்த வேதனையை பதிவாக எழுதி ஒன்றும் கிழிக்கமுடியாது என்ற ஆதங்கத்தில் அடர்த்தியான மனதோடு இருந்த நேரத்தில் பதிவர் பட்டாபட்டியின்இடுகை மூலம் பதிவர் டோண்டுவின் இடுகையை படிக்க நேர்ந்தது.
இதுவரை, ஒரு பதிவரின் இடுகை பிடிக்கவில்லையென்னும் போது விலகிச் செல்லும் மனோநிலை இங்கு வரவில்லை. டோண்டு பதித்துள்ள விசமத்தனம் படிக்கும் குமட்டிக்கொண்டு வந்தது. இவ்வளவு வக்கிரத்தோடு ஒரு மனிதன் தன் எழுத்தை கடை பரப்ப முடியுமா என்று.
விடுதலைப் புலி பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மையாரை தமிழகத்துள் வரவிடாதுபிளேனிலேயே திருப்பி அனுப்பிய விவகாரம் இங்கு பல எதிர்ப்புகளைகிளப்பியுள்ளது. அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினைபுரிகின்றனர்.
வயது முதிர்ந்த அந்த அம்மையாரை அனுமதிப்பதில் என்ன கெடுதல்வந்துவிடப்போகிறது என்பது இங்குள்ள பலரின் வாதங்களில் முக்கியமானது.முதலில் அதைப் பார்ப்போம்.
அப்படியே உள்ளே வந்தால் என்ன செய்திருப்பார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்.
அய்யா மனசாட்சியே இல்லையா? மனநலம் குன்றிய பக்கவாதம் பாதித்த, அந்த மூதாட்டியை வைத்து எப்படி பிரஸ் மீட் வைக்க முடியும். அப்படி பிரஸ் மீட்டு புலி ஆதரவாளர்கள் ஒன்னும் வக்கிர புத்தி கொண்டவர்கள் இல்லை.
இப்படியெல்லாம் உங்களைப்போல் படித்த ஒரு மனிதனால் எப்படி யோசிக்க முடிகிறது
தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்திஅந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்.
மிக மிக அசிங்கமான கற்பனை. உங்க பாழாப்போன கற்பனைக்கு அளவேயில்லையா?
இதுவரை அந்த அம்மா, அப்படி அழுததாகவோ, பேட்டி அளித்ததாகவோ யாரும் கேள்விப்பட்டதுண்டா?இதை விட அந்தத் தாயை ஒரு மனிதனால் இழிவு படுத்த முடியாது
பிறகு அவரதுபாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்கவேண்டியிருக்கும்.
அடப்பாவிகளா, சிகிச்சைக்கு வந்த ஒரு மூதாட்டியை இங்கு பாதுகாத்து கிழிக்க என்ன இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களை நச்சுக்குண்டு வீசிக் கொன்ற ராஜபக்சேவின் குடும்பம் சாமி கும்பிடனு டூர் வந்த போது, கொடுத்த பாதுகாப்புக்கு செலவு பண்ணுனது யார் ஊட்டு அப்பன் காசு. அன்னிக்கு நம்ம அரசாங்கம் செலவு பண்ணினப்போ இனிச்சுதோ?
ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாதுமுழி பிதுங்கியிருக்கும்.
வந்தாரை வாழவைத்த இந்த புண்ணிய தேசத்தில் ஒரு கிழவியை வைத்திருக்க வக்கில்லாமல், வெளியே அனுப்ப முழி வேற பிதுங்கித் தொலையனுமா?
எது எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்குவேண்டாம்.
நமக்குன்னா? டோண்டுவை வாசிக்கும் பாலோயர்களுக்கா?
நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாதுஎரித்து விட்டார்கள்.
பாவம் இந்த சி.பி.ஐக்காரங்க. டோண்டு சார்.... பிரபாகரன் செத்து எரிச்ச எவிடன்ஸ கொஞ்சம் சி.பி.ஐ கிட்ட சீக்கிரம் குடுங்களேன்
இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும்கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்.
அப்படி ஒன்னு நடந்தா, அதுக்கு யாராவது உண்டி குலுக்குனா நீங்க காசு போடவேணாம்
நாட்டின் நலனுக்கு இவை எதுவுமே உகந்ததில்லை.
உதவின்னு கேட்டு வந்த வயதான மூதாட்டிய திருப்பி அனுப்பினதால இந்த நாடு சுபிட்சம் அடைஞ்சிருச்சுங்களா?
ஆகவேதான் மத்திய அரசு இந்தமுடிவை எடுத்திருக்க வேண்டும்.
இது உங்க கண்டுபி்டிப்புங்களா? இல்ல மத்திய அரசு உங்கள கலந்துக்கிட்டு இந்த முடிவ எடுத்தாங்களா? மலேசியாவுல விசா குடுக்குறப்போ உங்கள கேக்காம கொடுத்துட்டாங்களா?
மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோஅல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம்நடக்காமல் தடுக்கப்பட்டது.
என்ன என்ன்ன்ன்ன்ன அசாம்பாவிதம் நடந்துடும்?
வெறுமனே சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாகஅமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதுநல்லதுக்குத்தான்.
என்ன ஒரு வக்கிரமான சந்தோசம்.
ஒரு தமிழச்சி என்ற உணர்வு வேண்டாம், ஒரு பெண் என்ற இரக்கம் வேண்டாம். பாவம் தன் கடைசி காலத்தில் இருக்கும் ஒரு வயதான நோயாளி என்ற குறைந்த பட்ச இரக்கம் கூட இல்லையா உங்களிடம்
அன்புடன், டோண்டு ராகவன்
’அன்புடன்’ க்க்க்கும் இந்த பாசாங்கு எதுக்கு. குறைந்த பட்ச மனித நேயம் இல்லாத உங்களுக்கு ”அன்புடன்” வார்த்தை மட்டும் எப்படி இனிக்குதோ?
நான் சொன்னதில் உறுதியாகவே இருக்கிறேன். இந்த எதிர்ப்புபின்னூட்டங்கள் அவரவர் தத்தம் குற்ற உணர்ச்சியை மறைக்கவே ஓவர் சீன்காட்டுவதாக எனக்கு படுகிறது. உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் படட்டும்.... அதுதான் மட்டறுத்த 91 பின்னூட்டங்களிலேயே தெரிகிறதே.... உங்களைத் தவிர அங்கு பின்னூட்டம் இட்ட அத்தனை பேரும் குற்ற உணர்ச்சி கொண்டவர்கள்தான்.
நான்ஒன்றும் இங்கே பாப்புலாரிடி காண்டஸ்டுக்கு எல்லாம் வரவில்லை.
என்மேல் மதிப்பு இல்லை எனச் சொன்னால் அது சொல்பவரது பிரச்சினை. அதை கூறுவதுஅவரது சுதந்திரம்.
அது சரி... உங்கள இத்தன நாள் படிச்சவங்களோட குற்றம்தான் அது.
------------------------------------------
சமீபத்தில் 1000 இடுகை எழுதியதாக அறிவித்த டோண்டு அவர்களின், இந்த இடுகையைப் படித்த போது அவரின் எழுத்தில் இருந்த வக்கிரம் குமட்டலை ஏற்படுத்தியது. தனக்கு எழுதத் தெரியும், தான் எழுதினால் வாசிக்க ஆள் இருக்கிறது என்ற தலைக்கனம் கொடுத்ததுதான் இது போன்ற மனிதநேயம் இல்லாத ஒரு இடுகைய எழுத தூண்டியிருக்கிறது.
நான் இந்த இடுகையை இடும் போது தமிழ்மணத்தில் அவர் இடுகைக்கு கிடைத்த ஓட்டு 7/45... அந்த 38 பேரின் கோபமும், 95% சதவிதத்திற்கு மேல் கண்டித்து வந்திருந்த பின்னூட்டங்களும், சில எதிர் இடுகைகளும் டோண்டு அவர்களுக்கு அவர் செய்த தவறை முகத்தில் அடித்தாற் போல் உணர்த்தும், ஆனால் உணர்வாரா?
அடிப்படை மனித நேயத்தை அடகு வைத்து விளம்பரம் தேடிய, மனித நேயமற்ற டோண்டு அவர்களுக்கு எதிரான என் கடும் கண்டனங்களை மனது முழுக்க அறுவெறுப்போடு பதிவு செய்கிறேன்.
ஓய்வூதியம் பெறும் அலி, பேராசிரியரான அவர் மகன் நெஜத் இருவரும், ஜெர்மனியில் வாழும் துருக்கியர்கள். அம்மா இல்லாத நெஜத்தை தாயும் தந்தையுமாக வளர்த்து ஆளாக்குகிறார் அலி. அன்பான வாழ்வு வாழும் அப்பாவும் மகனும், ஒன்றாய் குதிரை பந்தயத்தில் வென்று, அதை கொண்டாடுகின்றனர்.
வயதானலும்(!!!) காமம் அலியை விபசார விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. யெட்டர் என்ற துருக்கிய விபசாரியைச் சந்திக்கிறார், அடுத்த முறையும் அவளையே நாடுகிறார். ஓய்வூதியம், சொந்த வீடு, சேர்த்துவைத்த சொத்து என்ற பட்டியலின் அடிப்படையில் அவளை தன்னோடு மட்டும் படுக்க விலை பேசுகிறார்.
துருக்கிய பெண்ணான யெட்டர் விபச்சாரியாக இருப்பதைப் பார்த்த இரண்டு துருக்கியர்கள், ”ஒரு துருக்கியப் பெண், அதுவும் முஸ்லீம்,விபசாரம் செய்யலாமா” என்று மிரட்ட, சூழ்நிலை யெட்டரை அலியை நாடவைக்கிறது.யெட்டரை அலி வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அதை நெஜத் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இரவு நல்ல போதையில் இருக்கும் அலிக்கு மாரடைப்பு வருகிறது. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும் வழியில் நெஜத்துக்கு யெட்டரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்கிறது, தனக்கு ஒரு மகள் அயிட்டன் துருக்கியில் இருப்பதாகவும், தான் இங்கு காலணி கடையில் வேலை செய்வதாக பொய் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.
இருவருக்கும் இடையில் ஒரு இனம் புரியாத அன்பும், பரிவும் இழையோடும் வேளையில், அலி வீடு திரும்புகிறார். யெட்டர் நெஜத்துக்கும் இடையே உறவு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வர, நெஜத்தைக் கேட்க, நெஜத் கோபத்தோடு வீட்டை விட்டுக் வெளியேற, யெட்டர் மறுத்துத் திட்ட, அதேநிலையில் தன்னுடன் உறவு கொள்ள அழைக்கிறார் மிஞ்சிய குடிபோதையில் இருக்கும் அந்த கிழட்டு மனிதன். யெட்டர் மறுக்க, அலிக்கு கோபம் பொங்குகிறது, யெட்டரை அடிக்க, கீழே விழுந்து யெட்டர் இறந்து போகிறார். அலி சிறைக்குச் செல்ல, நெஜத் ஒரு கொலைகாரன் தந்தையாக இருக்க முடியாது என்று யெட்டரின் மகள் அயிட்டனைத் தேடி துருக்கி செல்கிறார்.
அதேசமயம் துருக்கியில் படிக்கும் கம்யூனிஸ்ட் கொள்கைவாதியான அயிட்டன், ஒரு போராட்டத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு போலிஸ்காரரை அடிக்க, அந்த போலிஸ்காரரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அயிட்டன் தப்பியோடும் போது, தன்னுடைய மொபைல் போனை தவறவிட, அதிலிருக்கு எண்களை வைத்து, அவளுடைய போராட்ட கால நண்பர்களை போலிஸ் கைது செய்கிறது. துப்பாக்கியை ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒளித்துவைத்துவிட்டு ஒரு வழியாக மாற்றுப் பெயரில் அயிட்டன் தன் தாய் இருக்கும் ஜெர்மனிக்கு தப்பி வந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து, அங்கிருக்கும் எல்லாக் காலணிக் கடைகளிலும் தன் தாயைத் தேடி, அதில் தோல்வியடைந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்துச் சமாளிக்க, குறைந்த விலையில் உணவு கிடைக்கும் பல்கழைக் கழக உணவு விடுதியில் உணவு உண்டு, அங்கிருக்கும் ஒரு வகுப்பறையில் தூங்குகிறார். அந்த வகுப்பறையில் தான் நெஜத் பேராசிரியராக வகுப்பெடுக்கிறார். இதெல்லாம் யெட்டர் அலி வீட்டில் வசிக்கும் நேரத்தில் நடக்கிறது.
இந்நிலையில் ஜெர்மன் மாணவி லோட்டோ, அயிட்டனைச் சந்திக்கிறார். அயிட்டனின் நிலையறிந்து அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். லோட்டோவின் தாயாருக்கு ஜெர்மனி அல்லாத பெண்ணை தன் வீட்டில் வைத்திருக்க விருப்பமில்லை. லோட்டோவும், அயிட்டனும் ஒரு நடனத்திற்குச் செல்ல, போதையில் இருவரும் நெருங்கி ஆட, இருவருக்குள்ளும் ஒரு பால் ஈர்ப்பு காதல் மொட்டாக உடைகிறது.
அடுத்த நாள் ஒருங்கிணைந்த ஐரோப்பியம், துருக்கி பற்றி விவாதிக்கும் போது அயிட்டனுக்கும், லோட்டோவின் தாயாருக்கு விவாதம் முற்ற, அயிட்டன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வருகிறது. லோட்டோவும், அயிட்டனும் காரில் கிளம்பிச் செல்லும் போது, பக்க வாட்டில் கடந்து செல்லும் பேருந்தில் மருத்துவமனையில் அலியை விட்டுவிட்டு திரும்பும் நெஜத்தும், யெட்டரும் பயணிக்கின்றனர்.
காரில் செல்லும் லோட்டோ, அயிட்டனை எதேச்சையாக போலிஸ் நிறுத்தி விசாரிக்க, அனுமதியில்லாமல் ஜெர்மனியில தங்கிய அயிட்டன் மாட்டிக்கொள்ள, அவர் துருக்கிக்கு நாடு கடத்தப் பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். அயிட்டனைக் காப்பாற்ற தன் தாயிடம் சண்டையிட்டு லோட்டோ துருக்கிக்கு பயணமாகிறார்.
அயிட்டனைத் தேடி துருக்கி வந்த நெஜத், அயிட்டனின் புகைப்படம் இல்லாததால், யெட்டரின் படத்தை போஸ்டராக ஒட்டி விளம்பரப்படுத்துகிறார். பலன் ஏதும் இல்லாமல் சோர்ந்து போய், துருக்கியிலேயே தங்க முடிவு செய்கிறார். அங்கு இருக்கும் ஒரு புத்தகக் கடையை விலைக்கு வாங்கி நடத்தியும் வருகிறார்.
எதேச்சையாக நெஜத் நடத்தும் புத்தகக் கடைக்கு வரும் லோட்டோ, அங்கு அயிட்டனைக் காப்பாற்ற துருக்கியின் சட்டப் புத்தகத்தை மாலை கடை மூடும் வரை படிக்கிறார். கடை மூடும் போது தங்க இடம் இல்லாத, லோட்டோவுக்கு உதவ நெஜத் முன்வருகிறார். தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் குறைந்த வாடகைக்கு தங்க அனுமதிக்கிறார்.
துருக்கிப் போலிஸ் அயிட்டனிடம் அந்த துப்பாக்கி குறித்து விசாரித்து வருகிறது. பல சிரமங்களுக்கு இடையில் அயிட்டனை லோட்டோ சிறையில் சந்திக்க, அயிட்டன் தான் துப்பாக்கியை ஒளித்து வைத்த இடம் பற்றிய குறிப்பை, வரைபடத்தைக் கொடுக்கிறார். லோட்டோ தன் தாயாரிடம் அயிட்டனைக் காப்பாற்ற பணம் தேவையென்று கேட்டு போனில் சண்டையிடுகிறார்.
ஒரு வழியாக லோட்டோ அயிட்டன் ஒளித்து வைத்த துப்பாக்கியை எடுத்து கைப் பையில் வைத்துக் கொண்டு வரும்வழியில், சிறுவர்களின் கும்பல் அந்தப் பையை திருடிக்கொண்டு ஓட, இவர் துரத்த ஒரு கட்டத்தில் அந்த துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் ஒரு சிறுவன் மிரட்ட, அது வெடிக்க லோட்டோ இறந்து போகிறார்.
லோட்டோ இறந்தைக் கேட்டு அதிர்ச்சியடையும் லோட்டோவின் தாய், தன் மகளின் கனவை நிறைவேற்ற துருக்கிக்கு வந்து அயிட்டனைக் காப்பாற்ற முயல்கிறார். லோட்டோ வசிக்க வீடு தந்த நெஜத்தைச் சந்திக்க அழைக்கிறார். சிற்றுண்டி சாலையில் சந்திக்கும் லோட்டோவின் அம்மாவை நெஜத் அடையாளம் காணும் போது, லோட்டோவின் அம்மா என்னை எப்படி எளிதாக அடையாளம் கண்டாய் எனக் கேட்க, நெஜத் சொல்கிறார் “இங்கு இருப்பவரில் நீங்கள்தான் அதிக கவலையோடு இருந்தீர்கள்’ என்று.
அயிட்டனைச் சந்தித்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அயிட்டனை சிறையிலிருந்து மீட்கிறார். வெளியில் வந்த அயிட்டன் நெஜத்தின் புத்தகக் கடைக்கு வருகிறார், அதற்குச் சற்று முன்தான், அயிட்டனைக் கண்டுபிடிக்க முடியாத அயற்சியில் அயிட்டனின் அம்மா யெட்டர் குறித்த விளம்பரப் போஸ்டரை நெஜத் எடுத்து விடுகிறார்.
இதே நிலையில் நெஜத்துக்கு தன் தந்தை அலி விடுதலையாகி கிராமத்தில் இருப்பதாக தகவல் வருகிறது, கடையை லோட்டோவின் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, தன் தந்தையை பார்க்க ஜெர்மனிக்கு கிளம்புகிறார். கிராமத்தை நோக்கிய பயணத்தில் நெஜத்தின் காரில், வழியும் மனதை உருக்கும் இசை, நம்மையும் இம்சிக்கிறது. கிராமத்தில் அலி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடத்தை நெஜத் அடைந்து ஆற்றோர மணலில் உட்கார படம் நிறைவடைகிறது.
யெட்டரை ஆள நினைத்த அலி, அயிட்டனை வாழவைக்க நினைத்த யெட்டர், யெட்டரைத் தேடி வந்த அயிட்டன், அயிட்டனைத் தேடிச் சென்ற நெஜத், அயிட்டனை மீட்கச் சென்ற லோட்டோ என ஒவ்வொரு நிலையிலும் எதன் பொருட்டோ மனிதர்கள் சூழ்நிலையின் முன் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர்.
உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போடுகிறது.
மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாக பதித்து விட்டுப்போகின்றது
2007ல் வெளிவந்து சிறந்த திரைக்கதைக்கான கேன்ஸ் விருது பெற்ற, இந்தப் படத்தை பாதிக் அகின்(Fatih Akin) என்ற ஜெர்மன் துருக்கிய இயக்கியிருக்கிறார். அயிட்டனாக நடித்திருக்கும் Nurgul Yesilcay-ன் நடிப்பு மிக நேர்த்தியான ஒன்று.
மதியமே, சிறப்பு விருந்தினரான நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எத்தனை மணிக்கு வருவார் என்று விசாரித்தபோது, தவிர்க்க இயலாத தன் சொந்த அலுவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார். எப்படியும் வந்து விடுவார் என்ற தகவல் மிகப் பெரிய பீதியை கிளப்பியது. ஆனாலும் கடைசியாக 7.45 மணிக்கு நாமக்கல் வந்து சேர்ந்து, ஒரு வழியாக ஈரோடு கிளம்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தியோடு, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவக்கி விட்டோம்.
சட்டை அணியும் பழக்கமில்லாததால் வேட்டியும் துண்டும் மட்டும் அணிந்து வெற்று மேலோடு வந்திருந்த பெரியவர் திரு. அய்யாசாமி அரங்கத்தில் ஒரு அதிர்வினை ஏற்படுத்தினார். உடன் மகள் வயிற்றுப் பேரனை அழைத்து வந்திருந்தார்.
திரு. நாகராஜன் தன் மனைவி திருமதி. பிரேமா மற்றும் பேரனுடன் வருகை புரிந்தார்.
ஆட்சியர் வருகை தாமதமானதையடுத்து, வந்திருந்த மரங்களின் நாயகர்களோடு கலந்துரையாடலை ஏற்படுத்தி அந்த நேரத்தை மிக உபயோகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
குறிப்பாக திரு. அய்யாசாமி சொன்ன தகவல் மரம் வளர்த்த செடியாக நட்டு வளர்ப்பதைவிட, விதையாக ஊன்றி விட்டால், அது செடியாக முளைத்து வந்த பின் அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இல்லை என்ற தகவல் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
எந்த மரம் சிறந்தது என்ற கேள்விக்கு திரு. நாகராஜன் புங்கை மரம்தான் சிறந்தது, அதுதான் அதிகப்படியான ஆக்சிஜனைத் தருகிறது என்றார்.
உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும் கூட தன் உறுதியை விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டுவருவதாகக் கூறும் போது கூட்டத்திலிருந்தோர் மனமெல்லாம் சிலிர்த்தது. தான் மரம் நடப்போகும் சமயங்களில், அந்த இடங்களுக்கே உணவு, தண்ணீர் யார் மூலமாவது கொடுத்து அனுப்பும் மனைவியைப் பெற்றது வரம் என்று நெகிழ்ச்சியோடு திரு. நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.
மிக நீண்ட பயணத்திற்கு பிறகு கொஞ்சம் களைப்போடு வந்தாலும் கலெக்டர் திரு. சகாயம் அவர்கள் மிக உற்சாகமாகவே இருந்தார். மரங்களின் நாயகர்கள் இருவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தார், கூடவே மிக எழுச்சியாக உரை நிகழ்த்தத் தொடங்கினார்.
பயணக் களைப்பாக இருப்பதால் ஒரு பதினைந்து நிமிடத்தில் முடித்து விடுவாரோ என்ற பயத்தை தவிடு பொடியாக்கி முப்பது நிமிடங்களுக்கு மேலாக உரை நிகழ்த்தி அசத்தினார். உரை முழுதும் சிறிதும் விழாவுக்கு தொடர்பானதை விட்டு விலகாமல்,முழுக்க முழுக்க மரங்களின் பிதாக்களை பாராட்டி கௌரவிப்பதையும், மரங்கள் வளப்பது குறித்த தனது அனுபவத்தையும்,அரிமா சங்கம் மரம் நடுவதை தனது இலக்காக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் திரும்பத் திரும்ப மிக எழுச்சியோடு எடுத்துக் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக மரங்களின் பிதாக்களான திரு. நாகராஜன் மற்றும் திரு. அய்யாசாமி ஆகியோருக்கு திரு. சகாயம் அவர்கள் மூலம் நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும்வழங்கப்பட்டது.
அடுத்து கடந்த மாதத்தில் கண் தானம் அளித்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரு. சகாயம் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான பெருமை மிகு விழாவில் பதிவுலக நண்பர்கள் கேபிள் சங்கர், பாலாசி, அகல்விளக்கு ராஜா, காலப்பயணி வசந்த்குமார் மற்றும் திருப்பூர் பதிவர் நிகழ்காலத்தில் சிவா தனது மனைவி மற்றும் மகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மிகச் சிறந்த மனிதர்களான திரு. சகாயம் ஐ.ஏ.எஸ், திரு. அய்யாசாமி, திரு. நாகராஜன் ஆகிய மூன்று பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி மகத்தான விழா எடுத்த, என்னுடைய ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.
வாழ்நாளில் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொருவிதமாக கழிந்திருக்கின்றன. வீணாக கழிந்த பொழுதுகளும் உண்டு, பொன்னான காரியங்களை, நினைவுகளை பதித்து விட்டுப் போன பொழுதுகளும் உண்டு. நேற்றைய பொழுது என் வாழ்நாளில், ஒரு மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திப்போன பொழுது. எல்லாம் நிறைவடைந்து படுக்கையில் சாய்ந்த போது, நீண்ட நேரம் பிடித்தது மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்து உறக்கத்தை கைக்கொள்ள.
பதிவர்கள், வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை விழாவில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றேன். கலந்து கொள்ள விரும்புவோர் தயவுசெய்து என்னுடைய அலைபேசி எண்ணில் (98427-86026) தகவல் தெரிவித்துவிட்டு வருகை தர அன்புடன் வேண்டுகிறேன்.